2412. | ‘தழைத்த வான் சிறையன, தசையும் கவ்வின, அழைத்த வான் பறவைகள், அலங்கு பொன் வடிம்பு இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடைப் புழைத்த வான் பெரு வழி போக - காண்டியால். |
தழைத்த வாய் சிறையன - வளமான சிறந்த இறக்கைகளை உடையனவாய்; அழைத்த- தம் இனத்தைக் கூவி அழைத்த; வான் பறவைகள் - உயர்ந்த கழுகு, பருந்து முதலிய பறவைகள்; பொன்வடிம்பு இழைத்த - பொன்னால் விளிம்பு கட்டப்பெற்றுச் செய்த; வான் பகழி - (என்) சிறந்த அம்புகள்; இருவர் மார்பிடைப் புக்குப் புழைத்த - பரத சத்துருக்கனர்களாகிய இருவரது மார்பின் நடுவே நுழைந்து துவாரம் இட்டதனால் ஆகிய; வான்பெருவழி - சீரிய பெரிய வழியிலே; தசையும் கவ்வின - தசைகளைக்கவ்விக்கொண்டன வாய்; போக - போவதை; காண்டி - பார்ப்பாயாக...
இருவர் - பரத சத்துருக்கனர்கள். வான் பறவை - பெரிய பறவைகள்; கழுகு, பருந்துமுதலியன, அம்புகளின் முனையில் பளபளப்பான விளிம்புகள் அமைத்தல் வழக்கம். ‘ஆல்’ ஈற்றசை. 38 |