2413.‘ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த
 பெருமகன் ஏவலின் பரதன் தான் பெறும்
 இரு நிலம் ஆள்கைவிட்டு, இன்று,என் ஏ வலால்
 அரு நரகு ஆள்வது காண்டி - ஆழியாய்!

     ‘ஆழியாய்! - இராமனே!;  ஒருமகள் காதலின் - கைகேயி என்னும்
ஒருபெண்ணின்மேற் கொண்ட அன்பினால்;  உலகை நோய் செய்த -
உலகம் முழுவதையும்துன்பத்தில் துடிக்கச் செய்த;  பெருமகன் -
சக்கரவர்த்தியாகிய தயரதன்;  ஏவலின்- ஆணையால்;  பரதன் தான்
பெறும் இருநிலம்
- பரதன் தான் பெற்ற கோசல அரசை;  ஆள்கை
விட்டு
- ஆட்சி செய்தலைக் கைவிட்டு; இன்று - இந்நாள்; என் ஏ
வலால்
- என் அம்பின் வலிமையால்;  அரு நரகு ஆள்வது - கொடிய
நரகத்தைஅனுபவிப்பதை;  காண்டி - பார்ப்பாயாக...

     பரதன் அண்ணனுக்குத் துரோகம் செய்தவன் என்று  இலக்குவன்
கருதுவதனால், போர்க்களத்தில்இறப்பினும் அவனுக்கு வீர சுவர்க்கம்
இல்லை;  அருநரகமே வாய்க்கும் என்று கூறினான். ‘ஒரு மகள்காதலின்
உலகை நோய் செய்த’ என்பது நயமான தொடர்.  சினத்திலும் தயரதனைப்
‘பெருமகன்’ என்றது காண்க. ‘என் ஏவலால்’ என்பதனை ‘ஏ’ வலால் என்று
பிரியாது ‘ஏவலால்’ என்று ஒன்றாகவே கொண்டு கட்டளையால் என்று
பொருள் உரைத்தல் சிறக்கு மேல் கொள்க.                        39