2415.‘அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய்!
விரைஞ்சு ஒரு நொடியில், இவ் அனிக வேலையை
உரம் சுடு வடிக் கணை ஒன்றில் வென்று, முப்
புரம் சுடும் ஒருவனின் பொலிவென் யான்’ என்றான்.

     ‘அரம் சுட - அரம் என்னும் கருவியால் தேய்க்க; அழல் நிமிர் -
தீயைக்கக்கும்; அலங்கல்- மாலை அணிந்த; வேலினாய்! - வேற்படையை
உடையவனே! ; யான் -;  இவ் அனிக வேலையை - இந்த சேனைக்
கடலை;  உரம் சுடு - வலிமையைஅழித்துச் சுடுகிற;  வடிக்கணை
ஒன்றில்
- கூரிய ஓர் அம்பினாலே; ஒரு நொடியில்விரைஞ்சு - ஒரு
நொடிப் பொழுதில் விரைவாக; வென்று - (அழித்து) வெற்றிகொண்டு;
முப்புரம் சுடும் ஒருவனின் - திரிபுரங்களை அழித்த சிவபிரானைப் போல;
பொலிவென்’ - விளங்குவேன்;’ என்றான் - என்று கூறினான்.

     ஓரம்பால் ஒருநொடியில் அழித்தல் பற்றித் திரிபுரத்தை அழித்த சிவன்
போல என்றுஉவமை கூறினான் இலக்குவன். ‘விரைந்து’ என்பது செய்யுள்
எதுகை நோக்கி ‘விரைஞ்சு’ எனநின்றது. ‘போலி’ எனினும் ஆம். திரிபுரம்
எரித்த கதை; தாரகாசுரனது மக்களாகியதாரகாட்சன், கமலாட்சன்,
வித்யுன்மாலி என்னும் மூவரும் தவம் செய்து  வரம் பெற்றுப்பொன்,
வெள்ளி, இரும்பால் ஆகிய கோட்டைகளைப் பெற்றுக் கோட்டையுடனே
பறந்து சென்று தங்கி அழித்து அனைவரையும் வருந்தினர். சிவபூசையில்
தவறாது  இருத்தலின் அழிக்கப்படாதவர்ஆயினர். இந்திரனும் திருமாலும்,
உலோகாயதனும், புத்தனும் ஆகி அவர்பால் சென்றுஅம்மார்க்கங்களைப்
பேசி அவரைத் திரித்துச் சிவபூசை இல்லாதவர் ஆக்கினர். பின்னர்ச்
சிவபெருமான் மலை வில்லாக, வாசுகி நாணாக, பூமி தேராக, சூரிய
சந்திரர்கள் சக்கரங்களாக,வேதம் குதிரையாக, பிரமன் சாரதியாக, திருமால்
அம்பாக, அக்கினி அம்பின் முனையாக,தேவர்கள் தேர் உறுப்புகளாகக்
கொண்டு அவர் முன் சென்ற அளவில் தேவர்கள் முதலியோர்தம்மால்தான்
சிவபிரான் அவர்களை வெல்லமுடிகிறது என்று நினைத்து அகங்கரித்தாராக,
அதனைஉணர்ந்த சிவபிரான் சிரித்தாராக, அக்கணமே அசுரரும்
கோட்டையும் சாம்பராயினர் என்பதுசிவபுராண சரித்திரமாம்.          41