2419.‘ “பெருமகன் என்வயின் பிறந்த காதலின்
வரும் என நினைகையும், மண்ணை என்வயின்
தரும் என நினைகையும்” தவிர, “தானையால்
பொரும்” என நினைகையும் புலமைப்பாலதோ?

     “பெருமகன் - பரதன்;  என்வயின் பிறந்த காதலின் - என்னிடத்து
உண்டாகிய அன்பினால்;  வரும் என நினைகையும் - (காடு நோக்கி)
வருகின்றான் என்றுநினைப்பதும்; மண்ணை - கோசல அரசை;
என்வயின் - என்னிடம்;  தரும் எனநினைகையும்” - தருவான் என
நினைப்பதும்;  தவிர - நீங்க;  “தானையால் -சேனைகளால்; பொரும் -
போர் செய்வான்;  என நினைகையும்” - என்றுநினைப்பதும்;
புலமைப்பாலதோ? - அறிவின்பாற் பட்டது ஆகுமோ?... (அன்று என்றபடி)

     அன்பு முதிர்ந்தவழி அறிவு தொழிற்படாது ஆதலின்,  என் வயின்
நேயம் மீதூர்ந்ததால்பரதனை அறிவால் அறிய இயலாதவன் ஆனாய் என்று
இதற்கும் ஓர் அமைதியை இலக்குவனுக்கு முன்பேகூறியது  காண்க. “காதல்
மிக்குழிக்கற்றவும் கைகொடா” (சிந்தா- 1632.) என்பது  ஈண்டுநினைக்கத்
தருவது, பரதன் வருவதன் உண்மை இராமனால் தெளிவாக இலக்குவற்கு
உணர்த்தப்பட்டது.                                             45