2421. | ‘சேண் உயர் தருமத்தின் தேவை செம்மையின் ஆணியை, அன்னது நினைக்கல் ஆகுமோ? பூண் இயல் மொய்ம்பினாய்! போந்தது ஈண்டு, எனைக் காணிய; நீ இது பின்னும் காண்டியால்.’ |
‘பூண் இயல் மொய்ம்பினாய்! - அணி அணிந்த தோள்களை உடையவனே!; சேண்உயர் தருமத்தின் தேவை - மிக உயர்ந்த தருமத்தின் தெய்வ வடிவமான; செம்மையின்ஆணியை - நல்லொழுக்கமாகிய செம்மையின் உரைகல்லாக விளங்குகின்ற உத்தம பரதனை; அன்னது - (நீ நினைத்தாற் போல) அப்படித் தவறுபட; நினைக்கல் ஆகுமோ? -கருதலாமா?; ஈண்டுப் போந்தது - (பரதன்) இங்கே வந்தது; எனைக் காணிய -என்னைக் காண்பதற்காக; இது - இக்கருத்தினை; நீ - இலக்குவ நீ!; பின்னும் - (அவன் நெருங்கிய) பிறகும்; காண்டி - (அவன்பால் நேரில்) பார்த்து அறிவாயாக. அறக் கடவுள், செம்மையின் ஆணி பரதன். செம்மை - மனக் கோட்டம் இன்மையாம்.நடுவுநிலைமை என்பதாம். எனவே, அரசின்பால் பற்று வைத்து ஒருபாற் கோடும் தன்மை அவனுக்கில்லை என்பதாம். ஆணி என்பதற்கு ‘அச்சாணி’ என உரை தந்து செம்மைத் தேரை நிலைநிறுத்தும் அச்சாணி என்று உரை கோடலும் ஏற்றுமேல்கொள்க. பூண் இயல் மொய்ம்பு - அணிகலனாகப் பொருந்திய வலிமை என்றும் ஆம். ‘ஆல்’ஈற்றசை. 47 |