பரதன் நிரை நோக்கிய இராமன் இலக்குவனிடம் கூறுதல்  

2423.தொழுது உயர் கையினன்; துவண்ட மேனியன்
அழுது அழி கண்ணினன்; ‘அவலம் ஈது’ என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை
முழுது உணர் சிந்தையான், முடிய நோக்கினான்.

     முழுது உணர் சிந்தையான் - எல்லாவற்றையும் எப்பொழுதும்
அறிந்தவாறே அறியும்திருவுள்ளமுடைய இராமன்; தொழுது
உயர்கையினன்
- தொழுதபடி  உயர்த்திய (உச்சிமேல்கூப்பிய) கையை
உடைய;  துவண்ட மேனியன் - (துன்பத்தால் துடித்து) வாடிய உடம்பை
உடைய;அழுது அழி கண்ணினன் - (இடையறாது) புலம்புதலால் (நீர்
வழிந்து,  பொலிவழிந்த கண்களைஉடைய; ‘அவலம் ஈது’ என எழுதிய
படிவம் ஒத்து
- அழுகை என்பது  இதுதான் என்று எழுதிய
வடிவம்
போல; எய்துவான் தனை - வருகின்ற பரதனை; முடிய நோக்கினான் -
முடிமுதல்அடிவரையிலும் நன்றாகப் பார்த்தான்.

     ‘அவலம்’ என்ற அழுகையென்ற மெய்ப்பாட்டுக்கு ஒரு படம் வரைந்து
அது பரதனாகும் என்பதாம்.அம்மெய்ப்பாட்டின் தன்மை - துவண்ட மேனி,
அழுதழி கண் முதலவாம். ‘துன்பமொரு  முடிவில்லைதிசைநோக்கித்
தொழுகின்றான்’ என (2332.) முன்னர்க் கூறியதனை ஈண்டுக்கருதுக.    49