2424. கார்ப் பொரு மேனி அக் கண்ணன் காட்டினான்,
‘ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய! நீ,
தேர்ப் பெருந் தானையால் பரதன் சீறிய
போர்ப் பெருங் கோலத்தைப் பொருத்த நோக்கு’ எனா.

     கார்ப் பொரு மேனி அக் கண்ணன் - கருமேகத்தை ஒத்த திரு
மேனியை உடைய அவ்இராமன்; (இலக்குவனை நோக்கி) ‘ஆர்ப்பு உறு -
ஆரவாரம் செய்கின்ற; வரி சிலை- கட்டமைந்த வில்லை ஏந்திய; இளைய
ஐய!
- தம்பியாகிய இலக்குவனே!; நீ-;  பரதன்-; தேர்ப் பெருந்
தானையால் சீறிய
- தேர்களை உடைய பெரிய சேனையோடு சீற்றம்
கொண்டு எடுத்த; பெரும்போர்க் கோலத்தை- பெரிய போர்க்கோலத்தை;
பொருந்தநோக்கு - நன்கு பார்ப்பாயாக;’ எனா - என்று; காட்டினான் -
காண்பித்தான்.

     இத்தகைய துன்பத்தோடு வந்துள்ளவனை இவ்வாறு நினைத்தானே
என்பது தோன்றக் காட்டினான்என்க. சொற்போக்கு இருப்பினும்
இலக்குவனை இராமன் பரிகசித்தான் எனல் இங்குக் கவியின்கருத்துக்கு
முரணாகும். முன்னர் ‘என்வயின் நேயநெஞ்சினால் அன்னது நினைத்திலை”
என்று (2418) இராமன் கூறியதாகக் கவிஞர் கூறுதலின், இலக்குவனுடைய
ஆர்ப்பரிப்பும், ஐயமும், சீற்றமும்பரதன் இயல்பினை அறியாதாயினும்
இராமன்பால் அன்பிற் சிறிதும் குறைந்ததில்லை என்பதுபெருதலின்.     50