பரதன் இராமனின் திருவடி வணங்குதல்  

2426.கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய
நாதனைப் பிரிந்தனள், நலத்தின் நீங்கினாள்,
வேதனைத் திருமகள் மெலிகின்றாள், விடு
தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான்.

     கோது அறத் தவம் செய்து - குற்றமில்லாமல் நல்ல தவத்தைச்
செய்து; குறிப்பின் எய்திய - தன் மனக்கருத்தின் வண்ணம் பெற்ற;
நாதனை - தன்நாயகனை; பிரிந்தனள்- பிரிந்து; நலத்தின் நீங்கினான்-
எல்லாநன்மைகளிலிருந்தும் நீங்கிய; வேதனை மெலிகின்றாள் -
துன்பத்தால் மெலிகின்ற; திருமகள் - இராச்சிய லட்சுமி; விடு தூது என -
(இராமநாயகன் பால்) அனுப்பிய தூது போல; பரதனும்-; தொழுது -
வணங்கி; தோன்றினான்-.

     பன்னெடுங்காலம் செய்த நற்றவத்தால் இராமனை அரசனாகப் பெறும்
பாக்கியம் கோசல அரசுக்குக் கிடைத்தது. அது உடனே
இழக்கப்பெற்றபடியால் இவ்வாறு கூறினார். மீண்டும் கோசல அரசை இராமன்
ஏற்க வேண்டுதற்கு வந்தவன் பரதன் ஆதலின் ‘விடு தூது’ எனப் பெற்றான்.
தற்குறிப்பேற்றவணி.                                            52