2427. | ‘அறம்தனை நினைந்திலை; அருளை நீத்தனை; துறந்தனை முறைமையை’ என்னும் சொல்லினான், மறந்தனன், மலர்அடி வந்து வீந்தனன் - இறந்தனன் தாதையை எதிர்கண்டென்னவே. |
வந்து - (பரதன் இராமன் அருகில்) வந்து; இறந்தனன் தாதையை - இறந்து போன தந்தையாய தயரதனை; எதிர் - தன் எதிரே; கண்டு என்னவே - மீண்டும்கண்டாற்போல; (இராமனைக் கண்டு) ‘அறம் தனை நினைந்திலை - அரச ஏற்றல் அறம்தான்என்பதை நினையவில்லை; அருளை நீத்தனை - இரக்கம் அற்றவனாக ஆயினாய்; முறைமையைத் துறந்தனை”- மூத்தவன் அரசாளுதல் என்கின்ற முறைமையயும் கைவிட்டாய்;’ என்னும் சொல்லினான் -என்கின்ற சொற்களைக் கூறியவனாய்; மறந்தனன் - தன் உணர்வு கெட்டு; மலர் அடி- (இராமனது) மலர் போன்ற பாதங்களில்; வீழ்ந்தனன் - விழுந்தான். அறம் - அரசாளுதல் அரச தர்மம் என்பது. பரதன்பால் காட்டவேண்டிய இரக்கம் - தான் அரசாளாது பரதன் அரசேற்க விரும்பமாட்டான் என்று உணராது அவன்பால் அரசைத் தள்ளிவிட்டு வந்தது இரக்கமின்மையாம். மூத்தவளாகிய தான் அரசாளவேண்டியது முறைமை யாதலின், முறைமையைத் துறந்தனை என்றான். இவ்வளவும் பரதனது ஆற்றாமையைப் புலப்படுத்துவனவாகக் கொள்க. ‘ஏ’ ஈற்றசை. 53 |