இராமன் மனம் கலங்கிப் பரதனைத் தழுவுதல் 2428. | ‘உண்டுகொல் உயிர்?’ என ஒடுங்கினான் உருக் கண்டனன்; நின்றனன் - கண்ணன் கண்எனும் புண்டரீகம் பொழி புனல், அவன் சடா மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே. |
கண்ணன் - அருட்கண்ணுடையவனாகிய இராமன்; ‘உண்டு கொல் உயிர்’ என ஒடுங்கினான்- உயிர் உண்டோ இல்லையோ என்று காண்பார் ஐயுறுமாறு மெலிந்து நின்றபரதனது; உரு - வடிவத்தை; கண்டனன்- பார்த்து; கண் எனும் புண்டரீகம்- (தன்) கண் என்கின்ற தாமரைகள்; பொழி புனல்- இரக்கத்தாற் சொரிகின்றகண்ணீர்; அவன் சடாமண்டலம் நிறைந்து போய் - அப்பரதனது சடைமுடியிற் போய்நிரம்பி மேற்சென்று; வழிந்து சோர - பெருகி வழிந்தொழுக; நின்றனன் -நின்றான். பரதன் உருவ மெலிவு இராமனது உள்ளத்தை உருக்கியது; கண்ணீர் பெருகியது; அதனால் காலில் விழுந்த பரதனது சடைமுடியைக் கண்ணீர் நிறைத்தது. ‘கொல்’ - ஐயம். மண்டலம் - வட்டம், சடாமண்டலம் - வட்டமாகச் சடையைச் சுழித்துக் கட்டுதலாம். 54 |