2432. | ‘விண்ணிடை அடைந்தனன்’ என்ற வெய்ய சொல், புண்ணிடை அயில் எனச் செவி புகாமுனம், கண்ணொடு மனம், கழல் கறங்கு போல ஆய், மண்ணிடை விழுந்தனன் - வானின் உம்பரான். |
வானின் உம்பரான் - விண்ணுலகத்துக்கும் மேல் உள்ள வீட்டிற்கு உரியவனாகியஇராமன்; ‘விண்ணிடை அடைந்தனன்’ என்ற வெய்ய சொல் - தயரதன் விண்ணுலகு அடைந்தான்என்ற கொடிய வார்த்தை; புண்ணிடை அயில் எனச் செவி புகா முனம் - புண்ணில் வேல் சொருகினாற் போலத் தன் காதில் நுழையும் முன்பே; கண்ணொடு மனம் - கண்ணும்மனமும்; கழல் கறங்கு போல ஆய்- கழல்கிற காற்றாடி போலச் சுழன்று; மன்னிடைவீழ்ந்தனன் - பூமியில் விழுந்தான். பரதன் கொண்டிருந்த தவ வேடத்தாலும், அவனது வாடிய மேனி வருதத்தாலும் புண்ணுற்ற இராமன் மனத்தில் தயரதன் இறந்த செய்தி வேல் இட்டாற் போன்று ஆயி்ற்று. வானின் உம்பரான் ஆயினும் தான் கொண்ட அவதார வேடத்திற் கேற்பத் துன்பத்திற் கலங்கினன் என்க. 58 |