2433. | இரு நிலம் சேர்ந்தனன்; இறை உயிர்த்திலன்; ‘உரும் இனை அரவு’ என, உணர்வு நீங்கினான்; அருமையின் உயிர் வர, அயாவுயிர்த்து, அகம் பொருமினன்; பல் முறைப் புலம்பினான் அரோ; |
(இராமன்) இரு நிலம் சேர்ந்தனன் - மண்ணில் விழுந்து; இறை - சிறிதளவும்; உயிர்த்திலன் - மூச்சுவிட்டானில்லை; ‘உரும் இனை அரவு’ என -இடியால் வருந்தும் பாம்பு போல; உணர்வு நீங்கினான் - உணர்ச்சி நீங்கப் பெற்றான்; அருமையின் - மிகச் சிரமமாக; உயிர் - உயிர்ப்பு உளதாக; அயாவுயிர்த்து- பெருமூச்சுவிட்டு; அகம் பொருமினன் - உள்ளே கலங்கி; பல் முறை புலம்பினான்- பலபடியாகச் சொல்லிப் புலம்பலானான். இடியேறுண்ட நாகம் போல வருந்தினான் என்றல் வழக்கு. அடியோடு உயிர்ப்பற்ற இராமன் சிறிதளவு அருமையாக உயிர்ப்பு வந்து, ஆற்றாமை நீங்கப் பெருமூச்சு விட்டுப் பின்னர் உள்கலங்கிப் புலம்பினானாம். ‘அரோ’ ஈற்றசை. 59 |