2435.‘சொல் பெற்ற நோன்பின்
     துறையோன் அருள் வேண்டி,
நல் பெற்ற வேள்வி நவை
     நீங்க நீ இயற்றி,
எற் பெற்று, நீ பெற்றது
     இன் உயிர் போய் நீங்கலோ?-
கொல் பெற்ற வெற்றிக்
     கொலை பெற்ற கூர் வேலோய்!

     ‘கொன் பெற்ற - அச்சம் தருதலை உடைய; வெற்றிக் கொலை
பெற்ற
-தமக்கு வெற்றி உண்டாகும் கொலைத் தொழிலை உடைய;  கூர்
வேலோய்
- கூரிய வேற்படையைஉடைய தயரதனே; சொல்பெற்ற - புகழ்
உடைய; நோன்பின் துறையோன் -தவத்துறையில் சிறந்த கலைக்கோட்டு
முனிவனது; அருள் வேண்டி- கருணையை வேண்டிப்பெற்று; நல் பெற்ற
வேள்வி
- நல்ல புத்திர காமேஷ்டியோடு கூடிய பரிமேத வேள்வியை;
நவை நீங்க - பிள்ளை இல்லாக் குறை தீர; நீ இயற்றி - நீ செய்து;
என்பெற்று - என்னை மகனாகப் பெற்று; நீ பெற்றது - நீ  அடைந்த
பயன்தான்; இன்உயிர் போய் நீங்கலோ? - இனிய உயிர் போய் இறக்கப்
பெறுதல்தானோ?

     சொல் - புகழ். கலைக்கோட்டு முனிவரை அரிதின் கொண்டுவந்து
வேள்வி இயற்றி இராமனைப் பெற்றானாதலின் இங்ஙனம் கூறப்பெற்றான்.
மக்களைப் பெற்று மகிழ எண்ணியவன் அம்மக்களைப் பிரிந்த துன்பத்தாலே
உயிர் போகப் பெறுதலால் இரக்கம் பெரிதாயிற்று. தயரதன் இறப்புக்குத்
தானே காரணமானோம் என்று இராமன் இரங்கினன். கொன் - அச்சம்,
பெருமை எனப் பொருள்படும். உரிச்சொல் - இனி, கொல் பெற்ற எனில்
கொலையாம், பின்னரும் கொலைபெற்ற என வருதலின் அங்ஙனம் பிரித்தல்
ஏலாதாம். வேள்வியால் மக்கள் நால்வர் தயரதனுக்கு உளர் ஆயினும்
தயரதன் இறப்புக்கு இராமன் பிரிவு ஒன்றே காரணம் ஆதலின்
‘எனப்பெற்று’ என்று கூறியதாகக் கருதுக.                           61