2436.‘மன் உயிர்க்கு நல்கு
     உரிமை மண் பாரம் நான் சுமக்க,
பொன் உயிர்க்கும் தாரோய்!-
     பொறை உயிர்த்த ஆறு இதுவோ?
உன் உயிர்க்குக் கூற்றாய்
     உலகு ஆள உற்றேனோ?-
மின் உயிர்க்கும் தீ வாய்
     வெயில் உயிர்க்கும் வெள் வேலோய்!

     ‘பொன் உயிர்க்கும் தாரோய்! - பொன் மயமான தாதுக்களை
உதிர்க்கும் பூமாலையை அணிந்தவனே!; மின் உயிர்க்கும் - ஒளி வீசுகிற;
தீ வாய் -நெருப்பு சிந்தும் வாயினை உடைய; வெயில் விரிக்கும் -
சூரியன் ஒளி சிந்துகிற; வெள் - வெண்மையான; வேலோய்! - வேலை
உடைய தயரதனே; மன் உயிர்க்கு - நிலை பெற்ற எல்லா உயிர்களுக்கும்;
நல்கு உரிமை - அருள் செய்கிற உரிமையுடைய; மண் பாரம் - (உன்)
அரசாட்சி என்கிற சுமையை; நான் சுமக்க - நான்ஏற்றுக்கொள்ள;
பொறை - அப்பூமி பாரம்; (நீ நீங்கி) உயிர்த்த ஆறு இதுவோ?-
இளைப்பாறிய விதம் இது தானோ?; உன் உயிர்க்குக் கூற்றாய் - உன்
உயிர்க்குயமனாக; உலகு ஆள உற்றேனோ - உலகத்தை ஆளப்
பிறந்தேனோ?

     “அரும்பொறை இனிச் சிறிது ஆற்ற ஆற்றலேன்” எனவும், “வியல்
இடப் பெரும் பரம் விசித்த தொய்யல் மாநிலச் சுமை உறு சிறை துறந்து”
எனவும், (1328, 1374) முன்னர் உரைத்தலின் “பொறை உயிர்த்த ஆறு
இதுவோ” என்று இங்கு இராமன் புலம்பியதாகக் கூறினார். இராமனை
அரசனாக அறிவித்த பிறகே தயரதன் இறப்பு முதலிய இவ்வளவும்
ஆயிற்றாதலின், ‘உன் உயிர்க்குக் கூற்றாய் உலகு ஆள உள்ளேனோ’ என்று
இராமன் புலம்பினன். இராமனுக்கு வந்த துயரங்களுக்குப் பரதன், தானே
காரணம் என்று வருந்தியது போல, தயரதன் இறப்புக்குத் தானே காரணம்
என்று இராமன் வருந்தினனாதல் கண்கூடு. “ஓ” இரக்கக் குறிப்பு.        62