2437. | ‘எம் பரத்தது ஆக்கி அரசு உரிமை, இந்தியங்கள் வெம் பவத்தின் வீய, தவம் இழைத்தவாறு ஈதோ?- சம்பரப் பேர்த் தானவனைத் தள்ளி, சதமகற்கு, அன்று, அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய்.! |
‘சம்பரப் பேர்த் தானவனை - சம்பரன் என்னும் பெயரை உடைய அசுரனை; தள்ளி - அழித்து; சதமகற்கு - இந்திரனுக்கு; அன்று - முன்பு; அம்பரத்தின் - விண்ணுலகத்தின்கண்; நீங்கா அரசு அளித்த - நீங்காத அரசாட்சியைக் கொடுத்த; ஆழியாய்! - சக்கர வர்த்தியே!; அரசு உரிமை- உனது அரசாளும் உரிமையை; எம் பரத்தது ஆக்கி - எம் வசமாகச் செய்துவிட்டு; இந்தியங்கள் - ஐம்பொறிகளும்; வெம்பவத்தின் - கொடிய பிறவி கெடுமாறு போல;வீய - கெட; தவம் இழைத்தவாறு - தவம் செய்தவாறு; ஈதோ - இவ்வாறுஇறப்பது தானோ? இந்திரியம் - இந்தியம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்பனவற்றைப் புலன்வழி செல்லாது அடக்கி நோன்பு செய்தல். தவத்தால் பிறவி கெடுமாறு; தவம் செய்யும்போதே பொறிகள் வசமாகின்றன என்பதாம். “எஞ்சல் இல் மனம் எனும் இழுதை ஏறிய, அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதே” என (1331) தயரதன் முன்னர்க் கூறியதை ஈண்டுக் கருதுக. “சம்பரனைக் குலத்தோடும் தொலைத்து, நீ கொண்டு, அன்று அளித்த அரசு அன்றோ, புரந்தரன் இன்று ஆள்கின்றது” (322) என்பதனுள் சம்பரனை அழித்து, இந்திரனுக்குத் தயரதன் அரசு அளித்த கதை வந்துள்ளது அறிக. சதமகன் - நூறு யாகங்களைச் செய்தவன். நூறு அசுவமேத யாகங்களைச் செய்தவன் இந்திரனாவான் ஆதலின் இந்திரனுக்குச் சதமகன் என்பது ஒரு பெயர். ‘ஓ’ இரக்கக் குறிப்பு. காசிபர் மனைவியருள் தநுவின் மகன் - தானவன். 63 |