2442. | பன்ன அரிய நோன்பின் பரத்துவனே ஆதி ஆம் பின்னு சடையோரும், பேர் உலகம் ஓர் ஏழின் மன்னவரும், மந்திரியர் எல்லாரும், வந்து அடைந்தார்; தன் உரிமைச் சேனைத் தலைவோரும்தாம் அடைந்தார். |
பன்ன அரிய - சொல்லுதற்கு அரிய; நோன்பின் - தவத்தை உடைய; பரத்துவனே ஆதி ஆம் - பரத்துவாசன் முதலாக உள்ள; பின்னு சடையோரும் -திரித்துவிட்ட சடையை உடைய முனிவர்களும்; பேர் உலகம் ஓர் ஏழின் மன்னவரும் - ஓர்ஏழு உலகங்களின் அரசர்களும்; மந்திரியர் எல்லாரும் - அமைச்சர்கள் எல்லாரும்; வந்து அடைந்தார் - வந்து சேர்ந்தார்கள்; தன் உரிமைச் சேனைத் தலைவோரும் தாம்அடைந்தார் - சக்கரவர்த்திகளுக்குரிய சேனையின் தலைவர்களும் வந்து சேர்ந்தார்கள். பரதனுடன் வந்தோர் பலரும் பின்னர் வந்து சேர்ந்தனர். ஆதலின், அவர்கள் எல்லாம்இராமனை நெருங்கினபடியை இதனாற் கூறினார் ‘தாம்’ என்பது உரையசை. 68 |