கலிவிருத்தம் 2444. | துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது புறத்து ஒரு துணை இலை, பொருந்தும் மன்னுயிர்க்கு; “இறத்தலும் பிறத்தலும் இயற்கை” என்பதை மறத்தியோ, மறைகளின் வரம்பு கண்ட நீ? |
‘மறைகளின் வரம்பு கண்ட நீ - வேதங்களின் எல்லையை அளவிட்டறிந்த நீ; பொருந்தும் மன்னுயிர்க்கு - (உலகத்திற்) பொருந்திய நிலைபெற்ற உயிர்களுக்கு; “இறத்தலும் பிறத்தலும் இயற்கை” - மரணம், சனனம் இரண்டும் இயல்பே; துறத்தலும்- துறவற நெறியில் சேர்தலும்; நல் அறத் துறையும் - அறத்தாற்றின் இல்வாழ்க்கைநடத்தலும்; அல்லது- அல்லாமல்; புறத்து - வெளியே; ஒரு துணை இல்லை- வேறு ஒரு துணையும் இல்லை; என்பதை - என்கின்ற செய்தியை; மறத்தியோ - மறந்துவிட்டாயோ. பிறத்தல் இறத்தல் இயற்கை ஆதலின், தயரதன் இறந்ததுபற்றி வருந்தல் வேண்டா. உயிர்க்குத் துணை அறவழியில் இல்லறம் ஆற்றல், அல்லது துறவறம் ஆதலின் அறவழியில் அரசாட்சி நடத்தி விண்ணுலகு சென்று இன்பம் துய்க்கும் ‘தயரதன்பற்றிவருந்தல் வேதங்களை நன்குணர்ந்த உனக்குக் கூடாது என்று வசிட்டன் இராமனுக்கு எடுத்துக்கூறினான். வீடுபேற்றுக்குச் சிறந்த வழியாதலின் துறவு முற்கூறப்பட்டது. ‘ஓ’ காரம்வினாப்பொருட்டு. 70 |