2447. சீலமும், தருமமும், சிதைவு இல் செய்கையாய்!
சூலமும், திகிரியும், சொல்லும், தாங்கிய
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும்
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ?

     ‘சீலமும் - நல்லொழுக்கமும்; தருமமும் - அறமும்; சிதைவு இல் -
சிதைதல் இல்லாத; செய்கையாய்! - செயலை உடைய இராமனே; சூலமும்,
திகிரியும், சொல்லும் தாங்கிய - சூலத்தையும், சக்கரத்தையும்,
வேதத்தையும் தரித்திருக்கிற; மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும் -
எல்லாவற்றுக்கும் மூலப்பொருளாய் வந்து அருளுகின்றமுப்பரம்
பொருளுக்கு ஆனாலும்; காலம் என்று ஒரு வலை - காலத் தத்துவம்
என்கின்ற ஒருவலையை; கடக்கல் ஆகுமோ - கடத்தல் இயலுமா?
(இயலாது என்றபடி).

     காலமும் கணக்கும் நீத்த காரணன் முத்தொழில் செய்கிறபோது
காலவலைக் குட்பட்டவனாகவே செய்கிறான் ஆதலின் காலத்தைக் கடத்தல்
இயலாது என்றதாம். செயல் என்பது காலத்தோடு கூடியது ஆகலான்
படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் செயல் செய்வார் மூவரும்
காலத்திற்குட்பட்டவரேயாம் என்க. சூலம் சிவனையும், திகிரி திருமாலையும்,
சொல் எனும் வேதம் பிரமனையும் காட்டியது. முன்னர் ‘உருளும் நேமியும்
ஒண்கவர் எஃகமும், மருள் இல்வாணியும் வல்லவர் மூவர்க்கும்’ என்றதும்,
(1417) காண்க. ‘மூலம் வந்து உதவிய’ என்பதற்கு மூலமாகிய பரம்பொருள்
உள்புகுந்து உதவிய மூன்று தேவர்கள் எனப் பொருள் உரைத்தலும் ஒன்று.
‘சொல்’ என்பது வேதம். நாமகள் என்று பொருள்படும். இரண்டுக்கும்
உரியவன் பிரமன் ஆதலின்.                                     73