2448.‘கண் முதல் காட்சிய, கரை இல் நீளத்த,
உள் முதல் பொருட்டு எலாம் ஊற்றம் ஆவன,
மண் முதல் பூதங்கள் மாயும் என்றபோது,
எண்முதல் உயிர்க்கு நீ இரங்கள் வேண்டுமோ?

     ‘கண் முதல் - கண்முதலிய பொறிகளின்; காட்சிய - காட்சி முதலிய
புலன்களுக்குக் காரணமானவை; கரை இல் நீளத்த - எல்லை இல்லாத
நீளத்தை உடையவை; உள் முதல் பொருட்டு எலாம் ஊற்றம் ஆவன -
உலகத்தில் உள்ள மூலப்பொருள்களுக்கெல்லாம்தோற்றுதற் காரணம்
ஆகியிருப்பவையாகிய; மண்முதல் பூதங்கள் - நிலம், நீர், தீ,காற்று,
ஆகாயம் என்ற ஐந்து பூதங்களுமே; மாயும் - அழியும்;
என்றபோது -
என்றால்; எண் முதல் உயிர்க்கு -இவற்றைவிட எளிய
முதற்பொருளாகிய; உயிர்க்கு - உயிர் அழிந்துபடுவதற்கு;  நீஇரங்கல்
வேண்டுமோ?
- நீ வருந்துதல் தகுதியாகுமோ? (தகுதியன்று என்றபடி).

     ஐம்பூதங்களின் சேர்க்கையால் அனைத்துப் பொருள்களும் உண்டாவன
ஆதலின், “பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன” பூதங்களே அழிகிறபோது
பூதங்களால் ஆகிய பௌதிகமாய உடல் அழிந்து உயிர் பிரிதல் எளிதன்றோ
என்றதாம். ‘எண்முதல்’ நினைத்தற்குரிய முதலாகிய உயிர் எனவும் அமையும்.
நினைத்தற்குரிய பூதங்களே அழிகின்ற தெனின் நினைத்தற்குரிய உயிர்
பிரிதற்கு வருந்த வேண்டுமோ என்றாராம்.                          74