2450. | ‘இவ் உலகத்தினும் இடருளே கிடந்த, அவ் உலகத்தினும் நரகின் ஆழ்ந்து, பின் வெவ் வினை துய்ப்பன விரிந்த யோனிகள், எவ் அளவில் செல எண்ணல் ஆகுமோ? |
‘(உயிர்) இவ் உலகத்தினும் - இம்மைக்கண்ணும்; இடருளே கிடந்து- துன்பத்திற் கிடந்து உழன்று; அவ் உலகத்தினம் - மறுமைக் கண்ணும்; நரகின்ஆழ்ந்து - நரகத்தில் அழுந்தித் துன்புற்று; பின் - பிறகு; செல்வினைதுய்ப்பன - கொடிய வினைப்பயனை அனுபவித்தற் குரியவாய; விரிந்த யோனிகள் -பல்வேறு வகையான பிறவிவகைகள்; எவ் அளவில் செல - எந்தக் கணக்கில் அடங்க; எண்ணல் ஆகுமோ? - என்னக் கூடுமோ? (கூடாது என்றபடி) உயிர் எடுக்கும் பல்வேறு வகையான பிறவிகள் கணக்கில் அடங்காதன. “உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்” (திருஞா. தேவா: 1-132.4) என்றார் வினைவழியில் உயிர் இவ்வாறெல்லாம் ஆதலின் அதுபற்றி இரங்கவேண்டா என்றார். 76 |