2451. | ‘உண்டுகொல் இது அலது உதவி நீ செய்வது? என் தகு குணத்தினாய்! தாதை என்றலால், புண்டரீகத் தனி முதற்கம் போக்கு அரு விண்டுவின் உலகிடை விளங்கினான்அரோ! |
‘எண் தகு குணத்தினாய்! - எல்லாராலும் நன்கு மதிக்கப்படுகின்ற குணங்களைஉடையவனே!; தாதை என்றலால் - (தயரதன் உனக்குத்) தந்தை என்ற காரணத்தால்; புண்டரீகத் தனி முதற்கும் - தாமரை மலரில் வீற்றிருக்கும் ஒப்பற்ற படைத்தற் கடவுளானபிரமனுக்கும்; போக்கு அரு - செல்லுதற்கு அரிய; விண்டுவின் உலகிடை -திருமால் உலகத்தில்; விளங்கினான் - சென்று சேர்ந்து ஒளி பெற்றான்; நீசெய்வது உதவி - மகளாகிய நீ தந்தைக்குச் செய்வதாகிய உதவி; இது அலது உண்டுகொல்- இதுவல்லது இதன்மேல் வேறு உண்டோ? (இல்லை என்றபடி). நினைக்கப்படுகிற குணங்கள் என்றுமாம். எட்டுக் குணங்கள் என்பாரும் உளர். தந்தையை நற்கதியில் சேர்த்தல் மகன் கடமையாதலின், விண்டு லோகத்தில் தயரதனை விளங்கவைத்தலின் மகனாற் பெறவேண்டியதைத் தயரதன் பெற்றுச் சிறந்தான் என்றார். விளங்குதல் - ஒளியுடல் பெறுதல். பிரமனுக்கும் செல்லமுடியாத விண்டு உலகத்தில் விளங்கினான் என்று கூறினார் ஏனும், பின்னர் மீட்சிப்படலத்து, “புண்டரீகத்துப் புராதனன் தன்னொடும் பொருந்தி, அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை, அழக!” என்று (10070) தயரதன் கூறுமாறு கொண்டு ஏற்பப் பொருள் செய்க. 77 |