2453.‘விண்ணு நிர் மொக்குகளின் விளியும் யாக்கையை
எண்ணி, நீ அழுங்குதல் இழுதைப்பாலதால்;
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை; போய்
மண்ணு நீர் உகுத்தி, நீ மலர்க்கையால்’ என்றான்.

     ‘நீ-; விண்ணு நீர் மொக்குளின் - ஆகாயத்திலிருந்து பெய்யும்
மழையில் எழுந்தநீர்க்குமிழி போல்; விளியும் - (நிலையில்லாமல்) அழிகிற;
யாக்கையை -உடம்பைக் குறித்து; எண்ணி அழுங்குதல் - சிந்தித்து
வருந்துதல்; இழுதைப்பாலது- பேதைமையின்பாற் படுவதாகும்; கண்ணின்
நிர் உகுத்தலின் கண்டது இல்லை
- கண்ணீர்சொரிதலால் அடையும்
பயன் ஒன்றும் இல்லை;  நீ மலர்க்கையால் - நீ தாமரை மலர்போன்ற கைகளால்; மண்ணு நீர் உகுத்தி- (பாவத்தைப் போக்கித்) தூய்மை செய்யும்
தருப்பண நீரைச் சொரிவாயாக;’ என்றான் - என்று  வசிட்டன் கூறினான்.

     துக்க மிகுதியால் கூறியும் இராமன் நீர்க்கடன் செய்ய எழாமையால்
மீண்டும் - வசிட்டன் கூறவேண்டியதாயிற்று. மண்ணு நீர் - மண்ணில் நீர்
உகுத்து என்னும் பொருள் பெரும். இழுதைப்பாலதால் - ‘ஆல்’ அசை.   79