இராமன் நீர்க்கடன் செய்து மீளுதல் 2454. | என்றபின், ஏந்தலை ஏந்தி வேந்தரும், பொன் திணிந்தன சடைப் புனிதனோடும் போய்ச் சென்றனர், செறி திரைப் புனலில்; ‘செய்க’ என, நின்றனர்; இராமனும் நெறியை நோக்கினான். |
என்றபின் - என்று முனிவன் கூறிய பிறகு; ஏந்தலை ஏந்தி - இராமனைக்கொண்டாடி; வேந்தரும் - அரசர்களும்; பொன் திணிந்தன சடைப் புணிதனோடும் போய்- பொன்னைத் திணித்து வைத்தாற்போன்ற சடைகளை உடைய தவத்தோனாகிய வசிட்டனோடும் போகி;செறிதிரைப் புனலில் - நெருங்கிய அலைகளையுடைய நதிநீரில்; சென்றனர் -சென்று சேர்ந்தனர்; ‘செய்க’ என நின்றனர் - (இராமன் நீர்க்கடன்) செய்க என்று நின்றார்கள்; இராமனும் நெறியை நோக்கினான் - இராமனும் செய்யவேண்டிய வழிமுறைகளைச்சிந்தனையால் நோக்கினான்.. வசிட்டரும் வேந்தரும் நதிப்புனலில் சென்று நிற்க, இராமனும் நீர்க்கடன் செய்யும் கிரியை முறைகளை நோக்கினானாம். 80 |