2458. | வெந் துயர் தொடர்தர விம்மி விம்மி, நீர் உந்திய நிரந்தரம்; ஊற்று மாற்றில; சிந்திய - குரிசில் அச் செம்மல் சேந்த கண் - இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே! |
குரிசில் அச்செம்மல் - குரிசிலாகிய அந்தப் பரதனது; சேந்த கண்- சிவந்த கண்கள்; இந்தியங்களில் - (கண் முதலாகிய) பொறிகளில்; எறிகடல் உண்டுஎன்ன - அலை வீசுகிற கடல் இருக்கிறது என்று சொல்லும்படி; வெந் துயர் தொடர்தர- கொடிய சோகம் பீடித்தலால்; விம்மி விம்மி-; நீர் - நீரை; உந்திய- வெறிச் செலுத்தின; நிரந்தரம் - எப்பொழுதும்; ஊற்று - பெருகுதல்; மாற்றில - நீங்காதவையாய்; சிந்திய - (நீரைச்) சொரிந்து கொண்டேயிருந்தன. பூமியிற் கடல்போல இந்திரியங்களிலும் கடல் உண்டு போலும் என்று கண்டார் நினைக்கும்படிஇருந்தது பரதன் கண்களில் நீர் பெருகும் தன்மை என்பதாம். இந்திரியம் எனப்து ஐம்பொறிகளையும் குறிக்குமேனும் சிறப்பு வகையால் இங்குக் கண்களைமட்டும் கொள்க. ‘ஏ’ஈற்றசை. 84 |