இராமனும் தாயரும் அழ, யாவரும் அழுதல்  

2464.‘எந்தை யாண்டையான் இயம்புவீர்?’ எனா,
வந்த தாயர்தம் வயங்கு சேவடிச்
சிந்தி நின்றனன், சேந்த கண்ண நீர்-
முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான்.

     முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான் - எல்லாவற்றிற்கும்
முற்பட்டநான்முகனாகிய பிரமனுக்கும் முற்பட்டவனாகிய இராமன்; ‘எந்தை
யாண்டையான் இயம்புவீர்’ எனா
- என் தந்தை தயரதன் எங்குள்ளான்
சொல்லுங்கள் என்று; வந்த தாயர்தம் வயங்கு சேவடி- தன்னை
வந்தடைந்த தாய்மார்களது விளங்கிய திருவடிகளில்; சேந்த கண்ணநீர் -
சிவந்த தன் கண்களிலிருந்து நீரை; சிந்தி நின்றனன் - சொரிந்து
நின்றான்.

     திரு உந்தியில் பிரமனைப் பெற்ற திருமாலின் அமிசமானவன் இராமன்
ஆதலின், நான்முகத்தவற்கும் முந்தையான் ஆயினன், உலகியலில்
இறந்தோரைப் பற்றி விசாரிக்கும் முறை இதுவாகலின் இங்ஙனம் தாயரை
இராமன் விசாரித்தான்.                                         90