2465.தாயரும் தலைப்பெய்து தாம் தழீஇ,
ஒய்வு இல் துன்பினால் உரறல் ஓங்கினார்;
ஆய சேனையும், அணங்கனார்களும்,
தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார்.

     தாயரும் - தாய்மார்களும்; தலைப்பெய்து - ஒன்று சேர்ந்து;  தாம்
தழீஇ
- தாங்கள் இராமனைத் தழுவிக்கொண்டு; ஓய்வு இல் துன்பினால் -
ஒழிதல்இல்லாத துக்கத்தோடு; உரறல் ஓங்கினார் - கதறத் தொடங்கினார்;
ஆய சேனையும்- உடன் வந்த சேனைகளும்; அணங்கனார்களும் -
பெண்களும்;  தீயில் வீழ்ந்து தீமெழுகின் - தீயின் விழுந்து தீகின்ற
மெழுகு போல;  தேம்பினார் - மனம் உருகிஅழுதார்கள்.

     தீ மெழுகு - வினைத்தொகை உரறல் - கதறல், பேரொலி செய்தலாம்.
உரறு - பகுதி. துயரில் கைகேயியும் இணைந்தது காண்க.              91