மறு நாள் யாவரும் சூழ இருக்க, இராமன் பரதனை, வினாவுதல்  

2469.அன்று தீர்ந்தபின், அரச வேலையும்,
துன்று செஞ் சடைத் தவரும், சுற்றமும்,
தன் துணைத் திருத் தம்பிமார்களும்,
சென்று சூழ ஆண்டு இருந்த செம்மல்தான்

     அன்று தீர்ந்தபின் - அன்றையநாள் கழிந்தபிறகு (மறுநாள்); அரச
வேலையும்
- அரசர் கூட்டமும்; துன்று செஞ்சடைத் தவரும்- நெருங்கிய
சிவந்த சடையினை உடையமுனிவர்களும்; சுற்றமும் - சுற்றத்தினரும்;
தன் துணைத் திருத் தம்பிமார்களும்- தன்னுடைய இணைபிரியாத சீரிய
இளவல்களும்; சென்று சூழ - சென்று சற்றிலும் இருக்க; ஆண்டு இருந்த -
அங்கே வீற்றிருந்த; செம்மல்- தலைமையோனாய இராமன்...(மேல் முடியும்)

     அரச வேலை - அரசர் வேலை. ஈறுகெட்டது. வேலை - கடல்
என்பது ஈண்டுக் கூட்டத்தை உணர்த்தியது. உருவகம். மூவரையும் ஒருசேரத்
தம்பிமார்கள் என்றார். செம்மல்தான் ‘பரிந்து கூறினான்’ (2470) என
முடியும்.                                                      95