பரதன் தன் கருத்தை விளக்கி உரைத்தல் 2471. | என்றலும், பதைத்து எழுந்து, கைதொழா நின்று, தோன்றலை நெடிது நோக்கி, ‘ நீ அன்றி யாவரே அறத்து உளோர்? அதில் பின்றுவாய் கொலாம்?’ என்னப் பேசுவான்; |
என்றலும் - என்று இராமன் கேட்டவளவில் (பரதன்); பதைத்து - துடித்து; எழுந்து -; கை தொழா நின்று - கைகூப்பி வணங்கி; தோன்றலை நெடிது நோக்கி - இராமனை நெடுநேரம் பார்த்து; நீ அன்றி - நீ யல்லாமல்; அறத்து உளோர்- தருமவழியில் பிறழாமல் நிற்பார்; யாவர் - யார் இருக்கிறார்கள்; அதில் - அவ்வறவழியில்; பின்றுவாய் கொல்’ - நீயும் பின்னிடுவாயோ; என்ன- என்று; பேசுவான்- மேலும் கூறுவான் ஆயினன். இராமனும் இப்படிக் கேட்டுவிட்டானே என்பது பதைப்புக்கும், நெடிது நோக்கியமைக்கும் காரணம், அறவழியில் மேற்சொல்ல முடியாமல் பின்தங்கி விடுதலைப் ‘பின்றுவாய்’ என்றான். ‘கொல்’ ஐயவினா.‘ஆம்’ ‘ஏ’ அசைகள். 97 |