2472. | ‘மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும், நினக்கு ஒன்றா நிலை நிறுவி, நேமியான் - தனைக் கொன்றாள் தரும் தனையன் ஆதலால், எனக்கு ஒன்றா, தவம் அடுப்பது எண்ணினால்? |
‘மனக்கு ஒன்றாதன - (சான்றோர்) மனத்துக்குப் பொருத்தம் இல்லாதனவாகிய; வரத்தின் - வரத்தினால்; நின்னையும் நினக்கு ஒன்றாநிலை நிறுவி - உன்னையும்உனக்குப் பொருந்தாத நிலைமையில் நிறுத்தி; நேமியான்தனை - சக்கரவத்தியாகியதயரதனை; கொன்றாள் - கொன்ற கைகேயி; தரும் - பெற்ற; தனையன் -மகன்; ஆதலால் -; எனக்கு-; எண்ணினான் - நினைத்தால்; தவம் - விரதவொழுக்கத்தை; அடுப்பது - மேற்கொள்ளுவது; ஒன்றா - பொருந்தாது. ‘ஒன்றா’ என்பது ‘ஒன்றாது’ என்பதன் விகாரம். நான் தவம் மேற் கொள்வது பொருந்தாது என்று கருதியோ இவ்வாறு என்னை வினாவினாய் என்பது குறிப்பு. முறைமை தவறியதைக் கேட்ட வரம் ஆதலின் ‘மனக்கு ஒன்றாதன வரம்’ என்றான். 98 |