2473.‘நோவது ஆக இவ் உலகை நோய் செய்த
பாவகாரியின் பிறந்த பாவியேன்,
சாவது ஒர்கிலேன்; தவம் செய்வேன் அலேன்;
யாவன் ஆகி, இப் பழிநின்று ஏறுவேன்?

     நோவது ஆக - வருந்துவதாக;  இவ் உலகை - இந்த உலகத்தை;
நோய்செய்த - துன்புறுத்திய; பாவகாரியின் - பாவத்தைச்
செய்தவனிடத்தில்;  பிறந்த -; பாவியேன் - பாவியாகிய யான்;  சாவது
ஒர்கிலேன்
- சாகத்துணிந்தேனில்லை;  தவம் செய்வேன் அலேன் -
தவம் செய்வதற்குத் தக்கவனும் அல்லேன்; யாவன் ஆகி இப்பழி நின்று
ஏறுவேன்?
- (அப்படியானால்) எத்தன்மையானாகி இந்தப்பழியிலிருந்து
நீங்குவேன்?

      பழிநீங்குவது இறப்பினாலோ பிராயச்சித்தமாகத் தவம்
செய்வதனாலோ ஆகவேண்டும்.இரண்டும் இல்லையானால் என் பழியை
எவ்வாறுதான் போக்கிக் சொள்வேன் எனப் பரதன் மனம்கலங்கினான்.
பாவகாரி - பாவி.                                              99