2475.‘பிறந்து நீயுடைப் பிரிவு இல் தொல் பதம்
துறந்து, மா தவம் தொடங்குவாய் என்றால்,
மறந்து, நீதியின் திறம்பி, வாளின் கொன்று
அறம் தின்றான் என, அரசுஅது ஆள்வெனோ?

     ‘பிறந்து - (சக்கரவர்த்திக்கு மூத்த மகனாகப் ) பிறந்து;  நீயுடைப்
பிரிவு இல் தொல் பதம்
- நீ உரிமையாகப் பெற்றுடை உன்னைப் பிரிதல்
இல்லாத பழையதாகிய அரசபதவியை ; துறந்து  - கைவிட்டு;  மாதவம்
தொடங்குவாய் என்றால்
- நீயேபெரிய தவத்தைச் செய்யத்
தொடங்குவாயெனின்; மறந்து - அறிவு கெட்டு; நீதியின்திறம்பி - நீதிக்கு
மாறுபட்டு; வாளின் கொன்று - வாளால் கொலை செய்து; அறம்
தின்றான் என
- அறத்தை அழித்தவன் என்று சொல்லுமாறு; அரசு அது
ஆள்வெனோ?
- உரிமையில்லாத அரசை ஆள்வேனோ? (ஆளேன்
என்றானாம்)

     உரிமையும் உறவும் உடைய நீயே அரச பதவி கைவிட்டுத் தவம்
செய்வாய் ஆனால், அஃதில்லாத யான் ஆளத் தொடங்குதல் வலிந்து
கைப்பற்றி முறை தவறி ஆள்வதாக அன்றோ முடியும் என்றானாம். வாளின்
கொன்று - வாளால் மிரட்டி என்னும் பொருளில் வந்துள்ளது. அறம்
தின்றல் - தருமத்தை அடியோடழித்துவிடல்.                        101