பரதன் வேண்டுகோளை இராமன் மறுத்துரைத்தல்  

2478.சொற்ற வாசகத் துணிவு உணர்ந்த பின்,
‘இற்றதோ இவன் மனம்?’ என்று எண்ணுவான்,
‘வெற்றி வீர! யான் விளம்பக் கேள்’ எனா,
முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான்.;

     சொற்ற - (இவ்வாறு பரதன்) சொன்ன;  வாசகம் - சொற்களின்;
துணிவு - உறுதியை; உணர்ந்த பின் - அறிந்த பிறகு (இராமன்);  ‘இவன்
மனம்
- இப்பரதனது  மனம்;  ‘இற்றதோ’ - இன்னத்தன்மை உடையதோ;
என்று எண்ணுவான் - என்று கருதுபவனாகி (அவனை நோக்கி); ‘வெற்றி
வீர!
- வெற்றியுடைய வீரனே; யான்விளம்பக் கேள்’ எனா - யான் சில
வார்த்தைகள் சொல்லக் கேட்பாயாக என்று சொல்லி; முற்ற நோக்கினான்
மொழிதல் மேயினான்
- முழுவதும் நன்கு பார்த்துச் சொல்லத்
தொடங்கினான்.

     ‘முற்ற நோக்கினான்’ என்பதனை இராமனுக்கு ஒரு பெயர் ஆக்கினும்
அமையும். “மண்ணை என் வயின் தரும்” (2419) என்று இராமன் முன்னர்க்
கூறினானாயினும், பரதன் தான் அரசாளுதல் அறத்திற்கு விரோதம் என்று
கருதும் எண்ணம் உடையவனாயிருக்கின்றான் என்பது பரதன் கூற்றால்
இப்போது இராமனுக்கு விளங்கியது ஆதலின், பரதன் அரசாளுவது அறமே
என்றறிய உணர்த்திச் சில வார்த்தைகள் இராமன் கூறத் தொடங்கினான்.
அது இதன் பின்வரும் ஏழு செய்யுள்களில் கூறப்பெரும்.              106