2479. ‘முறையும், வாய்மையும், முயலும் நீதியும்,
அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம்
துறையுள் யாவையும், கருதி நூல் விடா
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால்.

     முறையும் - நல்லொழுக்கமும்; வாய்மையும் - சத்தியமும்; முயலும்
நீதியும்
- எல்லோரும் அடைய முயலும் நியாயமும்;  அறையும் -
சிறப்பித்துச்சொல்லப்பெறும்; மேன்மையோடு - மேன்மையும்; அறனும் -
தருமமும்; ஆதிஆம் - இவை முதலாகிய;  துறையுள் யாவையும் -
அறத்துறையுள் சேர்ந்த எல்லாம்; கருதி நூல் விடா இறைவர்- வேத
வழியிற் சிறிதும் பிறழாத அரசர்களது; ஏவலால்-கட்டளையாலே; இயைவ-
உண்டாவன என்பதை; காண்டி - அறிவாயாக.

     இறைவர் கருதிவழி பிறழாதவர் ஆயின் அவர் ஏவுவனவே அறத்
துறையாம் ஆதலின் தயரதன் ஏவல்வழி பரதன் அரசாளுவது அறமே
என்று பரதனுக்கு இராமன் உணர்த்தினான்                        105