2480. | ‘பரவு கேள்வியும், பழுது இல் ஞானமும், விரவு சீலமும், வினையின் மேன்மையும் - உர விலோய்! - தொழற்கு உரிய தேவரும், “குரவரே”எனப் பெரிது கோடியால். |
‘உர விலோய் - வலிமை பொருந்திய வில்லை உடையவனே!; பரவு கேள்வியும் - புகழ்ந்து சொல்லப்படும் நூற்கேள்வியும்; பழுது இல் ஞானமும் - குற்றமற்றநல்லுணர்வும்; விரவு சீலமும் - உடன் கொள்ளத்தக்க ஒழுக்கமும்; வினையின்மேன்மையும் - செய்தொழிலின் சிறப்பும்; தொழற்கு உரிய தேவரும் - வணங்குதற்கு்உரிய தேவர்களும்; “குரவரே” - பெரியோர்களே; என - என்று; பெரிது கோடி - மிகவும் மனத்திற் கொள்வாய். கேள்வி, ஞானம், சீலம், வினை மேன்மை என்பனவற்றைக் ‘குரவர்’ என்றது உபசாரவழக்கு. பழுது - ஐயம், திரிபு. ஒன்றோ, மற்றொன்றோ எனல் ஐயம்; ஒன்றைப் பிறிதாக உணர்தல் திரிபு; இவை இரண்டும் இல்லாத மெய்புணர்வே ஞானமாம். குரவர் இவர் என்பதைப் பின் கூறுவர். 106 |