பரதன் ‘யான் தர நீ முடிசூட்டு’ என இராமனை வேண்டல்  

2486.‘முன்னர் வந்து உதித்து, உலகம் மூன்றினும்
நின்னை ஒப்பு இலா நீ, பிறந்த பார்
என்னது ஆகில், யான் இன்று தந்தனென்’
மன்ன! போந்து நீ மகுடம் சூடு’ எனா,

     ‘மன்ன! - அரசனே!; முன்னர் வந்து உதித்து - எனக்கு முன்னே
வந்து பிறந்து; உலகம் மூன்றிலும் - மூன்றுலகத்தும்; நின்னை ஒப்பு இலா
நீ
- நின்னை ஒப்பாவாரைப் பெற்றிலாத நீ; பிறந்த-; பார் - இப்பூமி;
என்னது ஆகில் - (நீ சொன்னபடி) என்னுடைய தாயின்; யான் இன்று
தந்தனென்
- நான்இப்பொழுது அதனை உனக்குக் கொடுத்துவிட்டேன்; நீ
போந்து மகுடம் சூடு’
- நீ வந்துமுடிசூடுவாயாக; எனா- என்று சொல்லி...
(மேல் முடியும்).

     ‘நீ பிறந்த பார்’ என்று சொல்லி, ‘முதலில் இந்தப் பூமியில் நீ
பிறந்தபடியால் இது உனக்கே உரிமை; பின்னரே எனக்கு உரிமையாம்’
என்பது  பரதன் குறிப்பு. மன்ன! என்று பலமுறையும்பரதன் இப்பகுதியில்
இராமனை அழைப்பது குறிக்கொளத்தக்கது.                        112