2490. | ‘எந்தை ஏவ, ஆண்டு ஏழொடு ஏழ் எனா வந்த காலம் நான் வனத்துள் வைக, நீ தந்தபாரகம் தன்னை, மெய்ம்மையால் அந்த நாள் எலாம் ஆள், என் ஆணையால். |
‘எந்தை ஏவ -என் தந்தை கட்டளை இட்டவாறு; ஆண்டு ஏழொடு ஏழ் எனா - பதினான்கு ஆண்டுகள் என்று; வந்த காலம் - அமைந்த காலம்வரை; நான் வணத்துள் வைக - நான் காட்டில்தங்கியிருக்க; நீ -; தந்த பாரகம் தன்னை - தந்தை அளித்த அரசை; மெய்ம்மையால்- (தந்தையின்) சத்தியம் தவறாமல்; அந்த நாள் எலாம் - அந்தப் பதினான்கு ஆண்டுகளும்; என் ஆணையால் - என் கட்டளையால்; ஆள் - ஆள்வாயாக. ‘நீ தந்த பாரகம் - எனக்கு நீ கொடுத்த அரசு’ எனினும் ஆம். இருவருமாக இணைந்துதந்தையின் வாய்மை தவறாது காத்தலே அறமாம் என இராமன் பரதன்பால் கூறியதாகக்கொள்க. 116 |