அறுசீர் ஆசிரிய விருத்தம் 2491. | ‘மன்னவன் இருக்கவேயும், “மணி அணி மகுடம் சூடுக” என்ன, யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி; அன்னது நினைந்தும், நீ என் ஆணையை மறுக்கலாமோ? சொன்னது செய்தி; ஐய! துயர் உழந்து அயரல்’ என்றான். |
‘ஐய! - பரதனே!; மன்னவன் இருக்கவேயும் - தயரதன் உயிரோடு இருக்கின்றபொழுதிலேயும்; “மணி அணி மகுடம் சூடுக” என்ன - (என்னை) மணிகளால் அழகிய திருமுடியைச்சூடி அரசாள்க என்று தயரதன் பணிக்க; யான் இயைந்தது - நான் உடன் பட்டது; (எதனால்?)அன்னான் ஏயது மறுக்க அஞ்சி - (தந்தையும், மன்னனும் ஆகிய) அவன் ஏவிய ஒன்றைமறுத்தற்குப் பயந்தே (அல்லவா?); அன்னது நினைந்தும் - அதன் உட்கருத்தை நினைந்தபிறகும்; நீ என் ஆணையை - நீ என்னுடைய கட்டளையை; மறுக்கலாமோ - மறுத்தல்செய்யலாமோ?; துயர் உழந்து அயரல் - துன்பத்திற் கலங்கிச் சோர்வு அடையாதே; சொன்னது செய்தி’- நான் சொன்னதைச் செய்வாயாக; என்றான் - என்றுசொன்னான். ‘தாதை அப்பரிசு உரை செய’ (1382.) என்று முன்னர்க் கூறியதை இங்கு நினைவுகூர்க. தந்தையின் இடத்தில் என்னைப் பார்க்கின்ற நீ என் ஆணையை மறுக்கலாகுமோ என்ற பரதனை இராமன் வினாவி அறிவுறுத்தினன். ‘என்னைப் போல உன்னை ஆக்கிக்கொள்’ என்று குறிப்பாற் கூறினான். எனலும் ஆம். 117 |