கலிவிருத்தம்

2493.‘கிளர் அகன் புனலுள் நின்று, அரி, ஓர் கேழல் ஆய்,
இளை எனும் திருவினை ஏந்தினான் அரோ -
உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை
வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே.

     ‘அரி - திருமால்;  ஒர் கேழல் ஆய் - ஒப்பற்ற ஆதிவராக
மூர்த்தியாய்;  உளைவு அரும் - வருந்துதல் இல்லாத; பெருமை ஓர்
எயிற்றின் உள்புரை
- பெருமையுடைய ஒப்பற்ற தந்தத்தின் உள்ளிடத்தில்;
வளர் இளம் பிறையிடை - வளரும்தன்மை உடைய இளம்பிறைச்
சந்திரனிடத்தில்; மறுவின் தோன்ற - களங்கம் போலத்தோன்றும்படி;
கிளர் அகன் புனலுள் நின்று
- மிக்கு எழுகின்ற அகன்ற பிரளய கால
வெள்ள நீரி்ல் இருந்து;  இளை எனும் திருவினை - பூமி என்கின்ற
பெண்ணை;  ஏந்தினான்- எடுத்தருளினான்.

     பிரளயத்தின் இறுதியில் ஸ்ரீமத் நாராயணன் ஊழிக்கடலில் மூழ்கியிருந்த
பூதேவியை மேலே எடுக்க வராக அவதாரத்தைச் செய்தருளி, தன் கொம்பின்
நுனியாலே பூமியை மேல் எடுத்து நிருத்தி யருளினான் என்கின்ற கதை
இதனுள் கூறப்பட்டது இதனால் இப்போது நடப்பது ஆதிவராக கல்பம்
ஆயிற்று. இளை - பூமி; திரு என்கின்ற சொல் பெண் என்னும் பொதுப்
பொருளில்
நின்றது. இளை எனும் திரு, பூதேவியாம். கோடு பிறையும்
பூமி அதில் உள்ள களங்கமும் போலும் என்று உவமித்தார். ‘நிறக்கும்
செழுஞ்சுடர்க் கோடும், இப்பாரும், நிசாமுகத்துச், சிறக்கும் பிறையும்,
களங்கமும் போலும் எனில், சிறுகண், மறக்குஞ்சரம் செற்றமாயோன்,
அரங்கன் வராகம். - அது ஆய்ப், பிறக்கும் பிறப்பின் பெருமை எவ்வாறு
இனிப் பேசுவதே” எனப் (திருவரங்கத்து மாலை.28) பின்னுள்ளோரும்
இவ்வுவமையை இவ்வாறே அனுபவிப்பதை ஒர்ந்துணர்க. ‘அரோ’ அசை.                                                         119