2495.‘ஏற்ற இத் தன்மையின், அமரர்க்கு இன் அமுது
ஊற்றுடைக் கடல்வணண் உந்தி உந்திய
நூற்று இதழ்க் கமலத்தில், நொய்தின் யாவையும்
தோற்றுவித்து உதவிட, முதல்வன் தோன்றினான்.

     ஏற்ற - அறிதுயில் செய்தலை ஏற்றுக்கொண்ட; இத் தன்மையின் -
இத்தன்மையினாலே; அமரர்க்கு இன் அமுது ஊற்றுடைக் கடல்வணன்-
தேவர்களுக்கு இனியஅமுதத்தைச் சொரிதலுடைய கடல் போலும் கரு
நிறமுடைய திருமால்; உந்தி - தன்திருநாபியினாலே; உந்திய -
தோற்றுவித்த; நூற்று இதழ்க் கமலத்தில் - நூறுஇதழ்களை உடைய
தாமரை மலரிலிருந்து; முதல்வன் - எல்லாப் பொருள்களுக்கும்
மூலமானவனாகிய பிரமன்; நொய்தின் யாவையும் தோற்றுவித்து
உதவிட- எளிதில் எல்லாம் பொருள்களையும் உண்டாக்கி உலகிற்கு உதவ
வேண்டி; தோன்றினான்- வெளிப்பட்டருளினான்.

     பிரளய காலத்து  ஓடுங்கிய பிரமன் தான் ஒடுங்கிய நாபிக் கமலத்தில்
இருந்து மீண்டும்வெளிப்படுவான் என்பது படைப்புக் கொள்கை. திருமாலின்
நாபிக் கமலத்தில் பிரமன்வெளிப்பட்டுப் படைப்புத் தொழிலை நடத்தத்
தொடங்கினான் என்றவாறாம்.                                   121