2497.‘ “இத இயல் இயற்றிய குரவர் யாரினும்,
மத இயல் களிற்றினாய்! மறுஇல் விஞ்சைகள்
பதவிய இருமையும் பயக்க,  பண்பினால்
உதவிய ஒருவனே, உயரும்” எனபரால்.

     ‘மத இயல் களிற்றினாய்’ - செருக்குன்ற இயல்பினை உடைய ஆண்
யானையைஉடையவனே!; மறுவில் விஞ்சைகள் - குற்றமற்ற கல்விகளை;
பதவிய இருமையும் பயக்க- பக்குவப்பட  இம்மை  மறுமை இரண்டிலும்
பயன் கொள்ளுமாறு; பண்பினால் உதவிய -அன்போடு கற்பித்துக்
கொடுத்த; ஒருவனே - ஆசிரியனே; இத இயல் இயற்றிய -(ஒருவனுக்கு)
நன்மைதரும் இயல்பினைச் செய்த; குரவர்யாரினும் உயரும்’- எல்லாரினும்
மேம்படுவான்; என்பர் - என்று கூறுவார்கள்.

     இராமன் தந்தை தாயர் குரவர் யாரினும் உயர்ந்தவர் என முன்
கூறியவதனால், இங்கேஆசிரியரே குரவர் யாரினும் உயர்ந்தவர் என
வசிட்டன் கூறி, ஆசிரியராகிய தம் வார்த்தையைமறுத்தல்வடாது என்பார்
ஆயினார். “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” (வெற்றிவேற்கை. 1)
என்பதும் கருதுக. பதவிய - பதவியாக உள்ள என்றுமாம்.           123