2498. | ‘என்றலால், யான் உனை எடுத்து விஞ்சைகள் ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால், “அன்று” எனாது, இன்று எனது ஆணை; ஐய! நீ நன்று போந்து அளி, உனக்கு உரிய நாடு’ என்றான். |
‘என்றலால் - (ஆசிரியரே மேம்பட்ட குரவர்) என்று கூறுவதால்; ஐய! -இராமனே; யான் உனை எடுத்து - நான் உன்னை வளர்த்து; விஞ்சைகள் -கல்விகள்; ஒன்று அலாதன பல - மிகப் பல; உதவிற்று- கற்பித்தது; உண்மை -; (ஆகவே) ‘இன்று எனது ஆணை’ - இன்று என்னுடைய கட்டளையை; அன்று எனாது” - அல்ல என்று மறுக்காமல்; உனக்குரிய நாடு - உனக்கு உரிமையுள்ளநாட்டினை; போந்து- அடைந்து; நன்று அளி’ - நன்றாகக் காப்பாற்று; என்றான் - என்று கூறினான். குரவர் யாரினும் ஆசிரியரே மேலோர், அவர் வார்த்தையை மறுத்தல் கூடாது, மறுத்தல் அறநெறியன்று. யான் உன் ஆசிரியன் என்பது உண்மை. என் வார்த்தை மறாது அரசாள்க என்றான் வசிட்டன். ‘மறை ஒதுவித்து இவரை வளர்த்தானும் வசிட்டன் காண்’ (660) என்பதை ஈண்டு நினைக. |