வசிட்டனை வணங்கி இராமன் தன்நிலை விளக்கல்  

2499.கூறிய முனிவனைக் குவிந்த தாமரை
சீறிய கைகளால் தொழுது, செங்கணான்,
‘ஆறிய சிந்தனை அறிஞ! ஒன்று உரை
கூறுவது உளது’ எனக் கூறல் மேயினான்:

     கூறிய - (இவ்வாறு) சொன்ன; முனிவனை - வசிட்டனை(ப்) பார்த்து);
செங்கணான் - சிவந்த கண்களை உடையவனாகிய இராமன்;  குவிந்த
தாமரை சீறிய கைகளால்தொழுது
- குவிந்திருக்கின்ற தாமரையைத் தன்
அழகால் சீறி வென்ற கைகளால் வணங்கி; ‘ஆறிய சிந்தனை அறிஞ! -
அடங்கிய மனத்தை உடைய அறிஞனே!; உரை ஒன்று கூறுவது உளது’-
வார்த்தை ஒன்று சொல்ல வேண்டுவது உள்ளது; என - என்று; கூறல்
மேயினான்
- சொல்லத் தொடங்கினான்.

     குவித்த கைகளுக்குக் குவிந்த தாமரையை உவமையாக்கிக்கூறினார்.
‘செங்கண்’ கண் சிவந்திருத்தல் சிறந்த ஆடவர்க்குரிய இலக்கணம். “செங்கண்
சிறுச்சிறுதே எம்மேல் விழியாவோ” (திவ்யப் 494.) என்னும் திருப்பாவையைக்
காண்க. ‘ஆறிய சிந்தனை’ என்பது, ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர்’ என்பது போலக் கூறியது. (புறநா.191) ஆசிரியனாதலின் முதலில்
வணங்கிப் பின் கூறுவான் என்றார்.                               125