பரதன் தானும் காடு உறைவதாகக் கூறுதல் 2503. | முனிவனும், ‘உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம் இனி’ என இருந்தனன்; இளைய மைந்தனும், ‘அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு’ நான் பனி படர் காடு உடன் படர்தல் மெய்’ என்றான். |
(அது கேட்டு) முனிவனும் - வசிட்டனும்; ‘இனி உரைப்பது ஓர் முறைமைகண்டிலெம்’ என இருந்தனன் - இனிமேல் சொல்வதற்குரிய ஒரு நீதியை அறிந்தோமில்லை என்றுகருதிப் பேசாதிருந்தான்; இளைய மைந்தனும் - பரதனும்; ‘அனையதேல் -அப்பபடியானால் (இராமன் அரசாளமாட்டானானால்); ஆள்பவர் நாடு ஆள்க - இராச்சியத்தை ஆளுபவர் ஆளட்டும்; நான் பனிபடர் காடு உடன் படர்தல் மெய்’ - நான் பனிமிக்ககாட்டில் இராமனுடன் செல்லுதல் சத்தியம் என்றான். ‘யார் ஆண்டால் எனக்கென்ன’ என்றான் பரதன். பனி, துன்பமும் ஆகும். பரதனுக்காகப் பேசிய முனிவனே பேச இயலாமல்போன பிறகு இனிச் செயல் இல்லை என்று பரதன் காடுறையும் முடிவிற்கு வந்தான் என்க. 129 |