தேவர்கள் கூறுதல்  

2504.அவ் வழி, இமையவர் அறிந்து கூடினார்,
‘இவ் வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல்,
செவ் வழித்து அன்று நம் செயல்’ என்று எண்ணினார்.
கவ்வையர், விசும்பிடைக் கழறல் மேயினார்;

     அவ்வழி - அச்சமயத்தில்; இமையவர் - தேவர்கள்; அறிந்து -
உணர்ந்து; கூடினார்- ஒன்று சேர்ந்து ‘இவ்வழி- இப்பொழுது; இராமனை-;
இவன்
- இந்தப் பரதன்; கொண்டு ஏகு மேல் - உடனழைத்துக்கொண்டு
அயோத்திக்குப்போய்விடுவானாயின்; நம் செயல் - (அரக்கரை அழிக்க
வேண்டுவதாய) நம் காரியம்; செவ்வழித்து அன்று’ - ஒழுங்குற இயல்வது
அன்று; என்று எண்ணினார் - என்றுகருதி; கவ்வையர் - துன்பமுற்று;
விசும்பிடை- விண்ணிடத்து; கழறல்மேயினார்- பேசத் தொடங்கினார்கள்.

     அவதார நோக்கம் இராவண வதம் ஆதலின், இராமன் அயோத்திக்குச்
சென்றுவிடின் அது இயலாது போகும் என்று’ தேவர்கள் அஞ்சித் தடுக்கக்
கூடினர் என்பதாம். கவ்வை - ஆரவாரமும் ஆம். கழறல் - பொருள்
புரியாத உரத்த கூச்சலாம்.                                      130