2505. | ‘ஏத்த அரும் பெருங் குணத்து இராமன் இவ் வழிப் போத்து அரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான்; ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அந் நிலம் காத்தல் உன் கடன்; இவை கடமை’ என்றனர். |
‘ஏத்தஅரும் - புகழ்தற்கு அரிய; பெருங் குணத்து இராமன் - பெரியகுணங்களை உடைய இராமன்; தாதை சொல் -தந்தையின் வார்த்தையை; புரக்கும்-காப்பாற்றுகின்ற;பூட்சியான்-மேற்கோளுடையவன்; இவ்வழிபோத்தரும் - இக்காட்டிடத்தே செல்வான்; ஆத்தஆண்டு- (தந்தையால்) நியமிக்கப்பட்ட ஆண்டுகள்; ஏழினோடு ஏழும்-பதினான்கும்; அந்நிலம் - அவ்வரசை; காத்தல்- காப்பாற்றுதல்; உன் கடன் - உன் முறையாகும்; இவை கடமை’ - இவை, இருவராலும்தவறாது நிறைவேற்றி வைக்கப்பட்டவேண்டியவை; என்றனர் - என்றுசொன்னார்கள். போத்து அரும் எனப் பிரித்து, பொத்து எனக் குறுக்கமாக்கி, மனக்குற்றம் எனப் பொருள் தந்து, ‘மனக் குற்றமில்லாத தயரதன் சொல்லை’ எனக் கூட்டிப் பொருள் செய்தலும் ஒன்று. இனி, போற்று அரும் என்பது எதுகை நோக்கிப் ‘போத்தரும்’ என நின்றதாகக் கொண்டு, போற்றுதற்கரிய தந்தை எனினும் ஆம். யாத்த - கட்டப்பட்ட என்பது ஆத்த என நின்றது முதற்குறை. நிறைவேற்றியே தீர வேண்டியது கடமை எனப்படும். 131 |