வானவர் உரைப்படி பரதனை இராமன் அரசாள ஆணையிடுதல் 2506. | வானவர் உரைத்தலும், ‘மறுக்கற்பாலது அன்று’ யான் உனை இரந்தனென்; இனி என் ஆணையால் ஆனது ஓர் அமைதியின் அளத்தி, பார்’ எனா, தான் அவன் துணை மலர்த்த தடக் கை பற்றினான். |
வானவர் உரைத்தலும் - தேவர் இவ்வாறு கூறிய வளவிலே; ‘மறுக்கற்பாலது அன்று- (தேவர்கள் உரை) மறுக்கும் தன்மை உடையது அன்று; யான் உனை இரந்தனன் - நான்உன்னை வேண்டிக்கொண்டேன்; இனி-; என் ஆணையால் - என் கட்டளையால்; ஆனது ஒர் அமைதியின் - (உனக்குப்) பொருந்தியதான ஒரு தகுதிமுறைமையின்; பார் அளித்தி’- இவ்வுலகைக் காப்பாற்றுக; எனா - என்று சொல்லி; தான் - இராமன்; அவன் - அப்பரதனது; துணை மலர்த் தடக்கை - இரண்டு தாமரை மலர் போன்ற பெரியகைகளை; பற்றினான்- பிடித்துக்கொண்டான். வானவர் உரையும் உள்ளது; யானும் ஆணையிடுகிறேன் நீ அரசு புரிசு என்று இராமன் பரதனை வேண்டினான். பெரியவன் ஆதலாற் கைகளைப் பற்றிக்கொண்டான். ‘ஆனது ஓர் அமைதியின்’ என்பதற்கு நான் காட்டில் உறைவதற்கு நியமித்த காலம் வரை எனப் பொருள் கோடலும் ஒன்று. 132 |