பரதன் உடன்படுதல்  

2507.‘ஆம் எனில், ஏழ் - இரண்டு ஆண்டில் ஐய! நீ
நாம நீர் நெடு நகர் நண்ணி, நானிலம்
கோ முறை புரிகிலை என்னின், கூர் எரி
சாம் இது சரதம்; நின் ஆணை சாற்றினேன்.’

     ‘ஆம் எனில் - அப்படியானால்; ஐய! - தலைவனே; ஏழ் இரண்டு
ஆண்டில்
- பதினான்கும ஆண்டுகள் கழிந்தவுடன்; நீ -; நாம நீர்
நெடுநகர் நண்ணி
- (பகைவர்)அஞ்சம்படியான அகழி நீர் சூழ்ந்த பெரிய
அயோத்தி நகரை அடைந்து; நானிலம் - பூமியை;கோமுறை புரிகிலை
என்னின்
- அரசாட்சி செய்திடாயானால்; (யான்) கூர் எரி சாம்- மிக்க
நெருப்பில் (வீழ்ந்து) இறந்து படுவேன்; இது சரதம் - இது உண்மை; நின்
ஆணை சாற்றினேன்
- உன்மேல் ஆணையிட்டுக் கூறினேன்.

     நாமம் - அச்சம், பெருமை என்னும்பொருள்கள். ‘கோவாகி முறை
புரிகிலை என்னின்’ எனப் பிரித்தலும் ஒன்று.                       133