பரதன் கருத்திற்கு இராமன் இசைதல்  

2508.என்பது சொல்லிய பரதன் யாதும் ஓர்
துன்பு இலன்; அவனது துணிவை நோக்கினான்
அன்பினன், உருகினன்; ‘அன்னது ஆக’ என்றான்-
தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான்.

     என்பது - என்ற இச் சொற்களை; சொல்லிய - கூறிய; பரதன்-;
யாதும் ஓர் துன்பு இலன்
- யாதொரு துன்பமும் இல்லாதவனாக ஆனான்;
தன் புகழ் தன்னினும் பெரியதன்மையான் - தனது புகழ் தன்னைவிடப்
பெரிதாகப் பெற்ற தன்மையுடைய இராமன்; அவனதுதுணிவை
நோக்கினான்
- பரதனது உறுதியைப் பார்த்து; அன்பினன் உருகினன் -
அன்பினால் உருகி; ‘அன்னது ஆக’ என்றான் - அப்படியே ஆகட்டும்
என்று கூறி அதனைஉடன்பட்டான்.

     புகழினும் தான் பெரியவன் எனவும் உரைப்பதுண்டு.            134