2510. | அடித்தலம் இரண்டையும், அழுத கண்ணினான், ‘முடித்தலம் இவை’ என, முறையின் சூடினான்; படித்தலத்து இறைஞ்சினன், பரதன் போயினான் - பொடித் தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான். |
தலம் பொடி இலங்குறு பொலம்கொள் மேனியான் பரதன் - மண்ணின் புழுதி படிந்துவிளங்குகிற பொன்மயமான திருமேனியுடையம பரதன்; அழுத கண்ணினான் - அழுத கண்ணுடையனாய்;அடித்தலம் இரண்டையும் - இராமனின் இரண்டு திருவடிநிலைகளையும்; ‘முடித்தலம் இவை’ எனமுறையிற் சூடினான் - எனக்கு முடிகள் இவையே என்று கொண்டு முறைமைப்படி தலையின்மேற்சூடிக்கொண்டு; படித்தலத்து இறைஞ்சினான் - மண்ணில் விழுந்து; வணங்கிப் போயினான்- மீண்டு (அயோத்திக்குச்) சென்றான். இராமன் திருவடிநிலைகளையே தனக்கு. மகுடமாகச் சூடிக் கொண்டான். 136 |