யாவரும் மீளுதல் 2511. | ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும், சான்றவர் குழுவொடு தவத்துளோர்களும், வான் தரு சேனையும், மற்றும் சுற்றுற, மூன்று நூல் கிடந்த தோற் முனியும் போயினான், |
ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும் - பெற்ற தாயர் முதலாகிய கணக்கிட முடியாதசுற்றத்தினரும்; சான்றவர் குழுவொடு- பெரியோர்களும்; தவத்துளோர்களும் - தவமுனிவர்களும்; வான்தரு சேனையும்- பெருமை பொருந்திய சேனையும்; மற்றும் -ஏனைய பிறரும்; சுற்றுற - (பரதனைச்) சூழ்ந்து செல்ல; மூன்று நூல் கிடந்த தோள்முனியும் - முப்புரி நூல் அணிந்த தோள்களை உடைய வசிட்ட முனிவனும் (உடன்வர); போயினான்- மீண்டு சென்றான். வடமும், வடத்திற் புரியும், புரியில் நூலும் மும் மூன்றாகவே அமைதலின் ‘மூன்று நூல்என்றார். ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்” (திரு முருகு 183.) என்பது காண்க. வான் -உயர்வு, அரசர்க்கு உயர்வு தருகின்ற சேனை என்பதாம். 137 |